காஞ்சியில் ஒரு
அனுபவம்...
பல வருடங்களுக்கு முன், தேதி சரியாய் நினைவில்லை. நான் குடும்பத்துடன் மஹா பெரியவாளை தரிசிக்க
காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அவருக்கு வயது அதிகமாகி விட்டதால் அவர் தரையில்
படுத்தபடியே இருந்தார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவரை மடத்திலுள்ளவர்கள்
கைதாங்கலாக எழுப்பி அமர வைப்பார்கள். அவரும் பக்தர்களை பார்த்து ஆசி வழங்குவார்.
நாங்கள் அவருடைய ஆசிக்காக காத்திருந்தோம்.எங்களுடன் ஐம்பது பேருக்கு மேல் அவருடைய ஆசிக்காக காத்திருந்தார்கள். திடீரென்று ஒரு பரபரப்பு..
சலசலப்பு. மடத்தின் ஆட்கள் வேகமாக மஹா பெரியவாளை நோக்கி வந்தனர். அவர்களுக்குப்
பின்னால் ஒரு பெரிய மனிதர் வெள்ளை உடையில் தன் பரிவாரங்கள் புடை சூழ
குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார். வந்தவர்கள் மஹா பெரியவா எழுந்திருப்பதற்காக
காத்திருக்காமல் அந்த பெரிய மனிதரின் பெயரை சொல்லி............வந்திருக்கா என்று அவரை
எழுப்பத் தொடங்கினர். என் மனதிற்குள் ஒரு சிறு நெருடல். நாம் இவ்வளவு நேரம்
காத்துக் கிடக்கிரோமே பெரியவா முதலில் பக்தர்களை பார்ப்பாரா இல்லை அந்த
பணக்காரரைப் பார்பாரா என்று.மெதுவாக பெரியவா எழுந்து அமர்ந்தார். முதலில் பக்தர்களை
பார்த்து கையை தூக்கி ஆசி புரிந்தார். அவர் முகத்தில் இருந்த ஒளி அனைவரையும்
ஆட்கொண்டது. நாங்கள் எழுப்பிய ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர....என்ற ஒலி அந்த
இடத்தை ஆக்கிரமித்தது. மறுபடியும் மடத்து ஆசாமிகள் ...... வந்திருக்கா... என்று
பெரியவாளிடம் கூறினர். அந்த பெரிய மனிதர் ஒரு விலை உயர்ந்த சால்வையை பெரியவாளுக்கு
அணிவித்து கை கூப்பினார். மஹா பெரியவா முகத்தில் எந்த சலனமும் இல்லை. அமைதியாக
மீண்டும் படுத்துக் கொண்டார். தெய்வம் என்றால் அது தெய்வம்..... என்ற கண்ணதாசனின்
வரிகள் நினைவிற்கு வந்தன.
--- தளபதி நாகராஜ்.

No comments:
Post a Comment